சபிக்கப்பட்ட கடவுள் :-

இரு மனித ஆணவங்களின்

சமரினால்

உயரப் பறந்த படி

தன் இருப்பின் அர்த்தத்தில்

திளைத்துக் கொண்டிருந்த

ஒரு பட்டம் அறுக்கப்பட்டது....


கடற் காற்றின்

வேகத்தால் அலைக்கழிக்கப்பட்டு

இங்குமங்குமாக

வானில் தள்ளாடிக்

கொண்டே பார்வையிலிருந்து

விலகிச் செல்கிறது....


என்னைப் பொறுத்தவரை

அறுத்துவிடப்பட்ட பட்டம்

கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும்

பறவைக்குச் சமம்..

முரண் நிலையாயினும்

பொருள் ஒன்றுதான்..

பரிதாபமானது....


அகன்று செல்லும்

அந்தப் பட்டம்

என்னுள்ளிருக்கும் ஆகாயத்தை

உணர்த்திச் செல்கிறதோ என்னவோ?!

கடற்கரையை நிறைத்திருக்கும்

இந்த மனித தொகுப்பினுள்

நான் ஒரு தொடர்பற்ற

அலகாகவே உணர்கிறேன்....


ஒருக்கால் அந்தப்

பட்டம்

எனது எண்ணங்களைக்

கூட குறிக்கலாம்..

பிடியில்லாது பறத்தல்,

நிலை குலைதல்,

தாழ்வது போல் தோன்றி

மீண்டும் மேலேறிப் 

பறத்தல்....


இங்கிருக்கும் அனைவரும்

எப்போதும் என்னிடம்

பிரார்த்திக்கின்றனர்,

தங்களுக்கு தேவையானவற்றிற்காக..

சமயங்களில் பலர் ஏசுகின்றனர்,

தேவையானவை நிறைவேறாததிற்காக..

சிலர் என்னை

உரிமை கொண்டாடியும்,

சிலர் நான்

இல்லையென்று அறுதியிட்டும் கூச்சலிடுகின்றனர்..

என்னுள் ஓயாமல்

ஒலித்துக் கொண்டிருக்கும்

இக்குரல்களை நான்

பொருட்படுத்துவதேயில்லை....


ஆனால் இந்த

நூலறுந்த பட்டம்

எனது கருணையினை

சம்பாதிக்கின்றது..

அதே சமயம்

இப்போதெல்லாம் என்னால்

முன் போல

அதிசயங்களை நிகழ்த்த

இயலுவதில்லை....


என்று மனிதர்கள்

இந்த உலகை தின்று தீர்க்கப்

படைக்கப்பட்ட ஒரு

பண்டம் போல் பாவித்து 

செயல்பட ஆரம்பித்தார்களோ

அன்றே விரக்தியில்

என்னைச் சபித்துக்

கொண்டேன்....


இப்போது நான்

முனையப் போவதெல்லாம்,

அந்தப் பட்டம்

எனது கைகளில்

அகப்படும் வாய்ப்பிற்காகத் தான்..

அதோ அந்தப்

பட்டம்

கடலை நோக்கி

இழுக்கப்படுகிறது....


நான் மெல்ல

எழுந்து உடையில்

படிந்த மணலை

தட்டி உதறிவிட்டு

கடலை நோக்கி நடக்கிறேன்..

கடலை எட்டியதும்,

கடலின் மீதேறி

நடக்கிறேன்..

எப்படியும் அந்தப்

பட்டத்தைக் கைப்பற்றி விட

வேண்டும்....


இதுவரை தங்களின்

களிப்பில் லயித்திருந்த

அந்த மனிதக் கூட்டம்

நான் கடல் மீது

நடக்க ஆரம்பித்ததும்

என்னைப் பார்த்து 

ஆர்ப்பரித்துக் கூக்குரல்

எழுப்பும் சப்தம்

எனக்குப் பின்னே

கேட்கத் தொடங்குகிறது....


நானோ பெருமூச்சோடு

மறுப்பாக தலையாட்டியபடி

எதிர்த்து வரும்

அலைகளைத் தாண்டிக்

குதித்து அப்பட்டத்தை நோக்கி

ஓடத் துவங்குகிறேன்....


-----------------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-