நிகழ்வு :-
அணைத்துச் செல்லும் காற்றிலிருந்து தப்பிக்கொள்ள சருகுகள் சில தப்படிகள் சுருண்டோடி எம்பிக்குதித்து மீண்டும் சுருண்டோடி ஒதுங்கி நிலைக்கொண்டன.. மெல்ல எழுந்து சென்று அவற்றில் ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து உற்றுப் பார்த்தேன், அதன் சுருள் வடிவம் பொத்தல் விழுந்த புழுத் துளையைப் போல் காட்சியளித்தது.. பின்னர் பரிகாசத்துடன் "உஃப்ப்ப்" யென்று ஊதித் தள்ளினேன், தற்கொலைக்கென தலைகுப்புற குதிக்கும் கதாநாயகனைப் போல் கரணமிட்டபடி கீழ்நோக்கிப் பாய்ந்தது.. தரையை தொடப் போகும் வேளையில், பற்றுவதற்கு ஆளற்று அவ்விடத்திலே சுற்றி சுழன்று திரிந்து கொண்டிருந்த அதே காற்று அந்தரத்திலேயே அச்சருகினை கசங்காமல் அள்ளியெடுத்து பிரதோஷக் காலத்தில் பருவப் பெண் மிதக்க விடும் எலுமிச்சைத் தீபத்தைப் போன்று கவனத்துடன் ஆற்று நீரின் மீது கொண்டுசென்று அலுங்காமல் விட்டது.... -------------- Jinovy