சூதாடியின் வரம்:-
கணத்திற்குக் கணம்
கையை மீறி
நகர்ந்து கொண்டிருக்கிறது
எனது வாழ்க்கை....
நான் ஒரு சூதாடி..
நீங்கள் பந்தய
விடுதிகளுக்கு செல்வோரேயானால்,
ஏதேனும் ஒன்றில்
என்னை நிச்சயம்
பார்த்திருக்கக் கூடும்....
அதிர்ஷ்டத்தை நம்பி
சூதாட வருவோர்க்கு,
அது சூதின்
இன்ன பிற நுட்பங்களோடு
நுணுக்கமாக பின்னப்பட்டது
என்பது
பெரும்பாலும் தெரியாது....
அதிர்ஷ்டக்காரன்
என முத்திரையிடப்பட்டுள்ளேன்
என்பதால்,
பழக்கப்பட்ட நண்பர்கள்
தங்கள் பணத்திற்காக
விளையாட
என்னையே அழைப்பர்....
எனது கோரிக்கை
ஒன்றும் பெரிதல்ல..
விளையாட்டிற்கென
ஒரு கட்டணம்
ஜெயிப்பதில் கால்பங்கு....
புதிதாக வருவோர்க்கு
சூதின் வாகு புரியாது..
அவர்களில் பெரும்பாலோனார்
முதல் சுற்றிலேயே
எதிரிலிருப்போரை முற்றாக
துடைத்துவிட வேண்டும்
என துடிப்பர்....
ஆனால்,
ஒரு திறமையான
சூதாடி,
தான் பந்தயத்தில்
இருப்பதே
அடுத்தவர் உணராத
வண்ணம் அமந்திருப்பான்..
புலனாகாத
மனிதனைப் போல....
அவனது குறிக்கோள்
முதல் சுற்றோ,
இரண்டாவதோ, மூன்றாவதோ
கிடையாது..
எந்த சுற்றில்
தோற்றவரின் மூரக்கமும்
ஜெயித்தவரின் ஆணவமும்
உச்சகட்டமாக மோதுமோ
அந்த சுற்று....
அவன்
தனது நுட்பங்களை
தந்திரமாக செயல்படுத்தப்
போகும்
கட்டமும் அதுவே....
அதுவரையில்
அவனது உதடுகள்
முணுமுணுத்தபடி இருக்கும்..
மந்திரங்களை அல்ல!!
கலைத்துப் போடப்படும்
சீட்டுகளுக்கென
ஒரு வரிசைக்கிரமம்
உண்டு..
அந்த எண்களை
மனதால் பற்றியபடி
அவன் வருவான்....
ஒவ்வொரு முறையும்
சீட்டுக்கட்டு
கலைத்துப் போடப்படும்
போது
அவனும் மனதால்
லாவகமாக கலைந்து
அடுத்து வரப்போகும்
புது வரிசைக்கிரமத்தினுள்
ஒருங்குவான்....
ஒருமுறை, இருமுறை
அல்ல
ஒவ்வொருமுறையும் தன்
முன்னே விழும்
எண்களை முணுமுணுத்தபடி
சரிபார்ப்பான்....
எண்களின் அலைவரிசைக்குள்
அவன் வந்ததும்
மனித மனங்களின்
மோதலுக்காக
ஒரு மலையைப்போல்
பொறுமையாக காத்திருப்பான்....
அந்த உச்சபட்ச
பந்தய பணத்தைச் சுற்றி
சீட்டுகள்
பலஜோடி கைகளுக்குள்
பரிபாஷை பேசிக்
கொண்டிருக்கையில்,
யாரும் எதிர்பாரா
நேரத்தில்
தனது சீட்டுகளை
கவிழ்த்து
அங்கிருப்போரின் கண்களுக்கு
திடுமென புலனாவான்
அவன்....
அதன் பிறகு வரும்
கொண்டாட்டங்களையும்
பாராட்டுக்களையும்
வருணிக்கத் தேவையில்லையாதலால்
இத்தோடு நிற்கிறேன்....
மேற்கொண்டு,
அவனைப் பற்றி
யாருமறியாத இன்னுமொரு
விஷயத்தையும் சொல்கிறேன்....
நல்ல சூதாடி
என்றுமே
மனதார சிரிப்பதில்லை..
அவன்
ஒரு முடிவற்று
உட்குழிந்திருக்கும் பாத்திரம்
போன்றவன்..
எதனைக் கொண்டும்
அவனை நிரப்பிட
இயலாது....
ஏனெனில்,
அவனது
ஒவ்வொரு வெற்றியும்
அந்தப் பாத்திரத்தை
மேலும் மேலும்
உட்குழியச் செய்து
கொண்டேயிருக்கும்..
அதனுள்ளேயே
புதைந்து சாகக்கடவது
என்பதே
அவன் வாங்கி
வந்திருக்கும் வரம்....
Jinovy
Comments
Post a Comment