இறுதிக் கடிதம்:-
நடுக்கத்துடன் எழுதிக்
கொண்டிருக்கிறேன்..
எனது
இறுதியே இறுதியான
வார்த்தைகளை....
உள்ளங்கையுள்ளிருந்து
கசிந்து வரும்
வியர்வைத் துளிகள்
அடுத்த வரிக்கான
தாளின் பகுதியை
ஈரப்படுத்தியிருக்கின்றன....
இதே வேகத்தோடு
அடுத்த வரி சென்றால்,
ஈரத்தில் ஊறிப்போயிருக்கும்
தாள் கிழிந்துவிடலாம்
அல்லது
பிசுபிசுத்து பரவப் போகும்
பேனா மையால்
எழுத்துக்கள் மங்கிவிடலாம்....
கிழியாது எழுதினாலும்,
பின்னர் இக்கடிதம்
கிடைக்கப் பெறுவோர்
அம்மங்கலான
எழுத்துக்களைப் புரிந்துகொள்ள
திணறுகையில்
நான் கடத்த விழைந்த
உணர்வு
மட்டுப்பட்டுவிடுமோ என்கிற
அச்சம் உண்டாகவே
செய்கிறது....
ஈரமான பகுதியை விடுத்து
அதற்கடுத்த பகுதியில்
எழுதுகையில்
வரிகளுக்கான இவ்விடைவெளி
எதற்கோ நேர்ந்துவிட்டத்தைப்
போல தோன்றிவிடுமோ
என்கிற குழப்பமும்
வராமலில்லை....
தற்கொலை செய்து
கொள்வதை விடவும்
இது பெரும்
வாதையாய் மாறிக்
கொண்டிருப்பது
இங்கு கவனிக்கத் தக்கது....
எதுவும் வேண்டாமென
புதுத் தாளெடுத்து
எழுத ஆரம்பிக்கின்றேன்....
ஆனால்
முன்பிருந்த
தற்கொலை முனைப்பின்
வீரியம்
எழுத்தாய் மாற
ஏனோ திணறுகிறது....
"அது ஏன்?" என
வலிந்து யோசிக்கையில்,
பேனாவைப் பிடித்திருக்கும்
விரல்கள்
அனிச்சையாய் தாளின்
ஓரத்தில் நட்சத்திரத்தை,
நட்சத்திரத்தின் மேல்
நட்சத்திரத்தை
மீண்டும் மீண்டும்
வரைந்தபடியிருக்கின்றன....
மனதார தற்கொலையை
வேண்டுகிறேன் தான்..
ஆனால்
கையும் மூளையும்
பிணங்கிக் கொண்டதைப்
போல
தத்தமது இஷ்டப்படி
இயங்குகின்றன....
அனுபவஸ்தர்களிடம் கூட
யோசனை கேட்டுப்
பெற இயலாத
இச்சூழ்நிலையில்,
பேனாவை மூடிவைத்துவிட்டு
கதவை திறந்துகொண்டு
வெளியே வந்தேன்....
காலார நடந்தும்,
புகைத்தும்,
டீக் குடித்தும்,
இழந்த முனைப்பைப்
பற்றி
வெகுநேரம் யோசித்துக்
கொண்டிருந்தேன்....
தற்கொலை முடிவைக்
காட்டிலும்
அதற்கு முன்
இறுதிக் கடிதம் வரைய
எடுத்த முடிவு
எவ்வளவு அபத்தமானது
என்பதை எண்ணியதும்
எனக்கு நானே
வெகுவாகச் சிரித்துக்
கொண்டேன்....
----------- Jinovy
Comments
Post a Comment