காமம் :-

அணைக்கப்படாத காமம்
என்ன செய்யும்?..
நெட்டி முறிக்கும்?
இம்சிக்கும்?
மிருகமாக்கும்?
கழிவறையில் பூட்டிக்
கொள்ளச் செய்யும்?
.....

சமூக வலைதளங்களில்
பாலியல் வறட்சியைப்
பற்றி
பத்தி பத்தியாய்
எழுதுவோரை நினைத்துச் 
சிரித்திருக்கிறேன்....

அவற்றைப் படிக்கையில்,
கடலைப் பற்றி
கனவு கண்ட படி
கண்ணாடி தொட்டிக்குள் 
வளைய வரும்
மீனைப் போன்றோ..
வறட்டு வெயிலில்
காயும்
கிழிசலான உள்ளாடை
இதமான தென்றலில்
படபடப்பது போன்றோ,
காட்சிகள் மனக்கண்ணில்
தோன்றி மறையும்....

"காமத்தை அன்பாக
மாற்றி விடு "
ஒரு பேட்டியில்
ஓஷோ கூறியிருந்தார்..
அவரால் மாற்ற
முடிந்ததா?
முடிந்திருந்தால் மாட்டியிருக்க
மாட்டாரோ?
இருபதுகளில் இவ்வகையான
எண்ணங்கள் என்னைக்
குத்தியதுண்டு....

காமம்..
அமிழ்தாகவும்,
விடமாகவும்,
மருந்தாகவும்,
யோகமாகவும்,
இன்ன பிற
வகை வகைகளாகவும்,
பயன்படுத்தப்படலாம் என
சான்றோரால் விளக்கக்
கேள்விப்பட்டிருக்கிறேன்..
காமத்தின் தேவை
தமக்கு எவ்வகையானது
என்பதை
எளிய மனிதன்
யோசிக்கக் கூடுமா?!....

காமம் என்பது தான்
என்ன?..
பிரபஞ்சம் சொட்டிய
இறைமையை
புவி தன்னுள்
ஏந்திக் கொண்டதும்
முகிழ்க்கத் துவங்கிய
இயற்கையின்
ஆதி உணர்வு....
பச்சிளங்குழந்தையின் வீறல்
போல....
ஆரோக்கியத்தின் முதல்
அறிகுறி....
தாவரங்களின் பசிய
நெடி....

காமத்தினால் உருப்பெற்று
ஊதிப் பருத்திருக்கும்
இவ்வுலகம்
தன் பரிணாமவளர்ச்சியின்
மதிப்புரையை அன்பின்
பெயரால் எழுதிக்
கொண்டிருக்கிறது..
ஓஷோவின் வாக்கிற்கிணங்க..
தாடிக் கிழவன்
கூர்த்த மெய் ஞானாத்தால்
காமத்தோடு உலகையும்
தட்டி,
தன் காலடியில்
கிடத்தியிருந்திருக்கிறான்....

வக்கிரத்தை
கருப் பொருளாக
கொண்ட படங்கள்,
புத்தகங்களைத் தாண்டி
வந்து வெகுகாலமாகிறது..
ஆனால்
காமம் தான்
கையை விட்டுப்
போவதாயில்லை..
இதனை அன்பாக்கும்
வித்தை
ரசவாதத்தை ஒத்தது
போலும்..
பற்றறுக்கையில் துலங்கலாமமோ
என்னவோ!?!....

"காமத்தை கவனி!
அதனோடு வரும்
மூர்க்கத்தை நிறுத்து!!
காமத்தை வென்றிடலாம்!!!"
தெரிந்த பெரியவரொருவர்
சொன்னார்..
எனக்கு சரி,
கவனிக்க நேரமற்று
திரிவோர் பலர்
நிறைந்திருக்கும் இத்திருநாட்டில்
காமத்தின் வடிகாலென்பது
எது?
சிறுமழைக்கும் பொங்கிப்போகும்
சாக்கடைகள் வாய்க்கப்பெற்ற
தேசத்தில்
எளிய மனிதனின்
காமம் எத்தகைய
முக்கியத்துவம் வாய்ந்தது?....

சில நேரங்களில்
வேண்டா வெறுப்பாகவும்
காமத்தை ஆட்கொள்வதுண்டு..
அப்போது அதனை
உற்றுக் கவனித்துமிருக்கிறேன்..
கட்டிலில் காமம்
நிகழ்ந்தேறுகையில்,
அந்நெகிழ்வைத்
தாங்கியவாறு
அதன் நான்கு கால்களும்
துவார பாலகர்களைப்
போல் நிசப்தித்து
நிற்கும்..
அவற்றின் கீழுள்ள
வரையப்படாத செவ்வகப்
பரப்பில்
சற்று முன்
உருவியெறியப்பட்ட
மென்னுணர்வுகள் துவண்டு
போய்
முனகிக்கொண்டு கிடக்கும்..
இறுதியில் அவை,
நடுநிசியில்
திருட்டு மணலைக்
கடத்திக் கொண்டு
வீதியில் செல்லும்
மொப்பெட்களின் "படப்படப்பட"
ஒலிகளோடு கலந்து
நழுவி ஓடும்..
அத்தோடு அடுத்த
பல வாரங்களுக்கு
காமத்தைப் பற்றிய
எண்ணம் கிஞ்சித்தும்
எனக்குள் வராது
போகும்....

-------------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-