கொலைக்கருவி :-
அலுவலகத்தில் அவனை
"சாமியார்" என்றே
எல்லோரும் அழைத்தோம்..
"இளிச்சவாயன்", "பிள்ளைப்பூச்சி"
என மேலும் இரண்டொரு
கேலிப் பெயர்களும்
புழக்கத்தில் இருந்தன....
யாரிடமும் அவன்
கோபித்ததோ கடிந்ததோ
நான் கண்டதில்லை..
படீரென பேசுவோரிடம்
கூட,
அவரது இமையினும்
மென்மையான குரலில்
நவிலும் சுபாவி....
சம்பாத்தியத்தில் தனது
சேமிப்பும் செலவும்
போக,
ஏனையவற்றை ஆதரவற்றோருக்கென
தந்துவிடுவான்..
என்னையும் உதவுமாறு
உற்சாகப் படுத்துவான்..
வசதியற்ற பிள்ளைகளின்
மருத்துவ செலவிற்கு
வெகுவாக முக்கியத்துவம்
அளித்தான்....
சமீபகாலமாக அவனுக்கு
அவ்வப்போது
கடும் ஜுரம்
கண்டு செல்வது
வாடிக்கையாகி விட்டிருந்தது..
அவனது உடல் எடையும்
வெகுவாக
குறையத் தொடங்கியிருந்தது..
கேன்சரோ எலும்புருக்கியோ
என குழாமில்
யாவரும் கவலையோடு
கிசுகிசுத்துக் கொண்டார்கள்....
முப்பது வயதே
நிரம்பிய இளைஞன்..
வெளித்தோற்றத்திற்கு
சகஜமாகப் பழகினானெனினும்,
யாரிடமும் ஒரு வரைமுறை
வைத்தே பேசுபவன்..
அதன் பொருட்டே
அக்கறையும் தயக்கமும்
மாற்றி மாற்றி
யாவரையும் குழப்பத்தில்
ஆழ்த்தின....
போட்டு உடைத்துவிடுவதென
மறுநாள்
அவனிடம் விஷயத்தை
தெரியப்படுத்தினேன்..
உடனடியாக உடல்
பரிசோதனை மேற்கொள்ள
வேண்டியது பற்றியும்,
துணையாக நானே
உடன் வரத் தயார்
எனவும் கூறினேன்..
அமைதியாக அதனைக்
கேட்டுக்கொண்டவன்
புன்னகையோடு என்னை
கடந்து சென்றுவிட்டான்....
மறுநாள்
அவனது இருக்கை
காலியாக இருந்தது..
அடுத்த நாளும்
அப்படியே..
அதற்கடுத்த நாளும்..
என்னவென்று விசாரித்ததில்
குடும்ப நிமித்தமாக
வேலையை துறந்து
சென்றுவிட்டான் எனத்
தெரியவந்தது....
அன்றிலிருந்து 6-மாதங்களுக்குப்
பிறகு,
அவனை கிட்டத்தட்ட
மறந்தேவிட்டிருந்த நிலையில்
ஒரு நாள்
எனது அலைப்பேசிக்கு
அவனிடமிருந்து ஒரு
குறுஞ்செய்தி வந்தது....
தனக்கு எயிட்ஸ்
பாதிப்பு இருப்பதாகவும் ,
இரண்டு வருடங்களுக்கு
முன்பு
தற்கொலை செய்து
கொண்ட எங்களது
அலுவலக நண்பரோடு
கொண்டிருந்த உறவின்
காரணமாக தனக்கும்
தொற்று ஏற்பட்டதென
எழுதியிருந்தான்....
அதைப் படித்ததும்
முற்றிலும் நிலைகுலைந்து
போய்விட்டேன்....
“நான் இருக்கிறேனா”
என ஒருமுறை
கேட்டான்....
சுயநினைவு வந்தவனாய்
“மன்னிக்கவும். இத்தகவல்
என்னைப் பேரதிர்ச்சியில்
கிடத்தி விட்டது.
இப்போது எப்படி
இருக்கிறாய். நான் உனக்கு
எவ்வாறு உதவ வேண்டும்? “
என நான் பதிலனுப்ப....
அவன் ஒரு
புன்னகைக்காட்டியை
உதிர்த்தான்..
பின்னர்,
அவன் உதவிக்கொண்டிருந்த
ஆதரவற்றோருக்கு என்னால்
தொடர்ந்து உதவ
முடியுமா?
என்பது பற்றியதாக
அவ்வுரையாடல் தொடர்ந்தது....
எவ்வளவோ கேட்டுப்
பார்த்துவிட்டேன்,
இறுதி வரை
என்னை சந்திக்க
மறுத்துவிட்டான்....
இறக்கும் தருவாயில்
கூட,
அவன் கோரியது
அடர் தனிமை
மட்டுமே..
ஒருவேளை அவனது
இடத்தில் நான்
இருந்திருந்தால்,
இவ்வுலகையே சபித்திருக்கக்கூடும்..
அதில் சிறிதளவேனும்
சந்தோஷம் கண்டிருக்கவும்
கூடும்....
உங்களுக்கு ஒருவேளை
தோன்றியிருக்கலாம்..
இதையெல்லாம் அவன்
என்னிடம் வெளிப்படுத்த
வேண்டியதின் அவசியம்
என்ன?..
ஆம்!
அவன் என்னைக்
காதலித்தான்..
அதை என்னிடம்
பட்டவர்த்தனமாக சொல்லவில்லை
ஆனால் குறிப்புணர்த்தினான்....
இவ்வகை உறவிற்கான
ஆள் நானல்ல
என்றாலும்,
அவனது உடல்நிலையின்
பொருட்டு
இதனை ஒரு சூழ்நிலை
சிக்கல்
எனும் அளவில்
மதிப்பிட்டுக் கொண்டேன்..
அதே நேரத்தில்
எனது அசூயையை
வெளிப்படுத்த பரிதாப
உணர்வினைக் கைக்கொண்டேன்..
எனது அனைத்து
உரையாடல்களிலும் அதுமட்டுமே
நிறைந்திருக்குமாறு கவனமாகப்
பார்த்துக் கொண்டேன்....
என்னையும் அறியாமல்
நானொரு கூரான
ஆயுதத்தைத் தான்
அவன் மீது
பிரயோகித்திருந்திருக்கிறேன்..
காலஞ்சென்ற அவனது
துணைவனின் துரோகத்தைக்
காட்டிலும்,
நோயின் வீரியத்தைக்
காட்டிலும்..
எனது பரிதாபமே
அவனை விரைந்து
கொன்றுவிட்டதாய் அவ்வப்போது
எனக்கே தோன்றுவதுண்டு....
“உண்மையில் நான்
அதுபற்றி அவனிடம்
வெளிப்படையாக
பேசியிருக்க வேண்டுமோ? “
எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்,
உடனடியாக
மறுப்பான அதிர்வுகள்
உணர்வுகளின் மேலெழும்புகின்றன....
“ஒருவேளை
அவனது மரணத்தை
நான் உள்ளூர
விரும்பியிருந்திருக்கிறேனோ? “
இப்போது,
அதிர்வுகள் யாவுமற்ற
உணர்வுகளின்
கனத்த மௌனம்
எனது நெஞ்சை
அடைக்கச் செய்கின்றது....
----------- Jinovy
Comments
Post a Comment