நித்தியம் :-
அவன்,
இறப்பிற்கென காத்திருக்கிறான்..
சூழ்ந்துள்ளோரின்
பிரார்த்தனை முணுமுணுப்புகள்
அவனது செவிகளை
குறுகுறுக்கச் செய்கின்றன..
வெடிப்புற்ற உதடுகளின்
மேல் தோய்ந்திருப்பது
ஏளனமா? புன்னகையா?
எதுவென்று சரியாக
கணிக்க இயலவில்லை....
கற்பனையில் அவன்,
ஒற்றை ஆளாய்
மேடையில் "ராக்"
இசைத்துக் கொண்டிருக்கிறான்..
வான் நோக்கி
உமிழப்பட்ட நெருப்புப்
பொறிகள்
அவனது கண்கள்
இழந்திருந்த சோபைக்கு
புத்துயிர் அளிக்கின்றன....
இதயம் துடிப்பது
கேட்கும் அபூர்வ
தனிமைக்குள் ஆழ்ந்திருக்கும்
மற்றொரு வேளையில்,
ஈரமான இருதய
சுவர்களின் வெதுவெதுப்பை
உள்ளங்கையினால் தடவி
உணர்கிறான்..
அது
தாயின் கருவறையை
ஒத்திருப்பதாய் தோன்றுகிறது....
மூர்க்கமாகித் திரிந்த
நாட்களில்
அவன் உடைத்த
மனங்களுக்காக இறுதிமுறையாக
மன்னிப்பு கோருகிறான்..
இரு பக்கங்களிலும்
கண்ணீர் வழிந்தோட
உள்ளம் இலகுவாகி
மிதக்கின்றது....
இன்னும் என்ன
மிச்சமிருக்கிறது?..
எண்ணங்களற்ற அந்த
பரவெளியை நிறைத்திருக்கும்
வெளிச்சம் அவனைச்
சுடுவதில்லை..
கண்களை கூசச்
செய்வதில்லை..
ஆடைகள் களைந்து
குளியலுக்கு தயாராகும்
குழந்தையைப் போல்
வெட்கச் சிரிப்புடன்
துள்ளித் திரிகிறான்....
காதலித்தவரும் காதலிக்கப்பட்டவரும்
அவனை வாரியெடுத்து
ஆளுக்கொரு முத்தமிட்டு
மீண்டும் தவழ
விடுகின்றனர்..
இதுவரையில் அறிந்திராததொரு
புதிய சந்தோஷம்
மனதை நிறைக்கிறது..
உடலை குளிர்விக்கிறது....
அவனது பாதங்களை
தாங்கியிருக்கும் நிலம்
மெல்ல மெல்லமாய்
அவனை உள்வாங்கத்
துவங்குகிறது..
இறப்பின் மீதான
பயங்கள் யாவும்
உடல் புதைவதோடு
முடிவிற்கு வருகின்றன....
புதைகையில் அவன்,
உச்சரித்த பெயர்களைக்
கொண்டோர் அனைவரும்
ஆசீர்வதிக்கப்பட்டனர்..
அவனை அறியாது
கைகள் உயர்ந்து
ஆமோதிக்க,
அவனது மார்பு வரை
உள்ளிறங்கி விட்டது....
இந்த இறுதி
க்ஷணத்தில் அவன்
செய்ய மறந்துவிட்டதாய்
ஏதோ ஒன்று
எண்ணத்தில் பளிச்சிட,
"விருப்" என
முகம் வியர்க்கத்
துவங்குகிறது..
அப்போது
கழுத்து வரை
புதைந்து விட்டிருந்தான்....
மென்மேலும் புதைந்து
கொண்டிருக்கையில்,
என்னவாயிருக்கும் அது?
என்ற எண்ணம்
மூளையை ஆக்கிரமிக்க..
ஆம் !! நினைவிற்கு
வந்து விட்டது....
"துரோகிகள்"..
அவர்களைப் பற்றி
நினைத்ததும்
அவனது கண்கள்
நிலைகுத்தி நின்றுவிட்டன..
அவனிடமிருந்து அவர்களுக்கென
வெளிப்பட்ட அந்த
முற்றுப் பெறாத
வார்த்தை
"மன்னிக்கப்பட்டார்கள்"
என்பதாக இருக்கும்
என நம்புவோமாக..
இப்போது
அவன் முற்றிலுமாய்
புதைந்து விட்டிருந்தான்..
வாழ்ந்ததிற்கான யாதொரு
சுவடுமின்றி....
படுக்கையில் கிடக்கும்
அந்த பிரேதத்தின்
நிலை குத்திய
கண்களின் தாக்கம்,
காட்சி திரள்களின்
பிசுபிசுப்பால்
கடந்த காலத்தோடு
ஒட்டிக்கொண்டு
யாதொரு சலனமுமின்றி
கரைந்து விட்டிருந்தது....
----------- Jinovy
Comments
Post a Comment