யானை:-

இப்பூங்காவிற்கு
அடிக்கடி நான் 
வருகை தர
ஒரே காரணம், 
இதன் மையத்தில் 
எழுப்பப்பட்டிருக்கும் 
பளிங்கால் ஆன 
யானை சிலை.... 

அச்சிலையின் அடியில் 
தேங்கியிருக்கும் நிழலுக்கு 
ஒதுங்கியவாறு
அதன் பானை 
வயிற்றை அணைத்தபடி 
நிற்கக் கிடைப்பது
ஒருவகையான தவம்.... 

"பளிங்கு யானை!!"
யோசித்ததும் 
சிரித்துக் கொள்வேன்.. 
எல்லாப் பக்கங்களிலிருந்தும் 
அதனை அணுகிப்பார்ப்பேன்.. 
நிஜ யானையைப் 
போன்று கதகதப்பாய் 
இல்லாவிடினும், 
சிலை தரும் 
'யானையின்'
உருவ பிரமிப்பு !!
என்னுள் என்றென்றும் 
அழியாதிருக்கிறது....

சிறுவயதில், 
தெருவில் யானை 
வரக் கண்டதும் 
நண்பர்கள் நாங்கள் 
ஒருவரையொருவர் இடித்துக்கொண்டே 
அதன் பருத்த 
ஆகிருதியை அதிசயித்துப் 
பார்த்தபடி 
கோவில் வரை 
பின்தொடர்ந்து செல்வது 
பொதுவான அனுபவம்.... 

யானை உண்ணும் 
ஒவ்வொரு பண்டமும் 
அதன் கடைவாயினுள் 
உடைந்து நொறுங்குகையில் 
எழும்பும் ஒலி, 
துதிக்கை உட்பட 
அதன் உடலசைவு, 
பாந்தமான பார்வை, 
செல்லப் பிளிறல், 
என யாவும் 
என்றுமே சலிக்காத 
கண்கவர் கலை.... 

உருவில் ராட்சதமாயினும் 
பாகனுக்குக் கட்டுப்பட்ட 
செல்லப் பிராணி.. 
ஆனால், 
அதேப் பாகனை 
சுழற்றி எறிந்து 
மிதித்து 
சிதைத்துவிட்ட துர்பாக்கியத்தையும் 
ஒரு முறை 
கண்டிருக்கிறேன்....

வனத்துறையினர் வந்து 
மயக்க ஊசியினை 
எய்தும் வரை 
கோவிலின் முகப்பிலிருந்த 
இலுப்பை மரத்
தேரினை 
கடும் மூர்க்கத்துடன் 
தாக்கித் தகர்த்துவிட்டிருந்தது....

வேலைக்குச் சென்று 
கையில் காசு 
புரள ஆரம்பித்த 
நாட்களில் ஒருமுறை 
யானை சவாரி 
செய்துப் பார்த்தேன்..
ஆரம்பத்திலிருந்த குதூகலம் 
சற்று நேரத்திற்குள் 
திடுமென நழுவி, 
ஓர் குற்றவுணர்வு
பெரும்பாரமென என்னை 
அழுத்தத் தொடங்கியது....

உடனே அச்சவாரியை 
ரத்து செய்து 
கீழிறங்கி 
அந்த யானையைக் 
கட்டிக் கொண்டு 
அழுதேன்..
நான் செய்த 
பாவங்களிலேயே மிகப்பெரியது 
அது....

கடல் மலை யானை 
இம் மூன்றும் 
அழகியலில் சாஸ்வதமானது.. 
இக்கூற்று யாருடையதென்பது 
நினைவிலில்லை.. 
ஆனால், 
அவற்றை எட்ட நின்று 
பார்க்கும் வரை 
அது பேருண்மை.... 

வாழ்க்கை!!
அடுத்தடுத்த கட்டங்களில் 
குடும்பம்,  இலட்சியம், 
பொறுப்புகள் 
என பெரிதடைய, 
நானும் ஓர் யானையென 
உணரத் தொடங்கினேன்..
அக்கறையின்றி இருப்பது..
மூர்க்கத்துடன் வாதிடுவது.. 
சுயஉணவின்றி உண்பது.. 
எதிலும் முடிவெடுக்காது 
பாந்தமாய் கிடப்பது..
என எல்லாவற்றிலும்....

ஆனால், 
சமீபத்தில் தான் 
படித்தறிந்தேன்.. 
உண்மையில் யானைகள் 
சுயஒழுங்கு கொண்டவை.. 
உறவை மதிப்பவை.. 
கூட்டு வாழ்க்கையை 
அனுசரிப்பவை..
தனது இருப்பினால் 
ஒரு வனத்தையே 
உருவாக்க வல்லவை.. 
மொத்தத்தில் அவை 
எல்லாவாற்றிலும் என்னிலிருந்து 
மேம்பட்டவை....

உண்மை புரிந்ததும் 
மேலும் குன்றிப் 
போனேன்..
எனினும், 
எப்போதிருந்து 'யானை' 
புரியத் தொடங்கியதோ, 
அப்போதிலிருந்து 
வாழ்க்கையும் தெளியத் 
தொடங்கியிருக்கிறது!!.... 

--------------------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-