சல்லித்தனம் :-

வெகு நேரமாய் 
பயணித்ததில் 
மிகவும் களைத்துப் 
போயிருந்தோம்😓😓.... 

தூரத்தில் சலசலக்கும் 
நீரோடையினை நோக்கி 
எனது குதிரை, 
வாயில் நுரை தள்ள
விசுவிசுத்து 
நடை போட்டது....

சற்றுமுன் இவ்வடர் 
வனத்தினுள் நிகழ்ந்த 
எதிரியின் சுற்றிவளைப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிச்
சிதறியவருள் 
நானும் ஒருவன்🙁.... 

யுத்த தந்திரத்தில் 
பின்வாங்குதல் சிறந்த 
யுக்தியெனினும், 
வீரனென்னும் இறுமாப்பு 
என்னை விரக்தியடையச் 
செய்திருந்தது😖.... 

நீரோடையை அடைந்ததும் 
குதிரையை 
அதன் போக்கில் 
விடுவித்துவிட்டேன்.. 
அது தனது 
தாகத்தை தணித்துக் 
கொண்டது.. 
அற்பப் பிறவி, 
வயிற்றுப் பாட்டிற்கென 
இங்கேயும் அங்கேயும் 
மேய்ந்தபடி  திரிந்து 
கொண்டிருந்தது.... 

பொதிபொதியான எண்ணங்கள்
பசியையும் தாகத்தையும் 
மீறி 
என்னை மூச்சடைக்க 
செய்யத் துவங்கின.. 
தப்பிக்கையில் 
எனது உடைவாளைத் 
தவற விட்டிருந்தது 
அவமானத்திலும் அவமானம்😩.... 

ஏனைய யாவற்றையும் 
பற்றி துளிகூட 
யோசிக்கத் தோன்றவில்லை.. 
ஆனால் எனது போர்வாள்!!
எத்துணை எதிரிகளைச் 
சாய்த்திருக்கும்!!
இரத்தக் கறைகளை 
கழுவியதோடு யாவும் 
முடிவுற்றதாய் தோன்றியதில்லை..
இறப்புற்ற அவர்தம் 
ஆன்மாக்கள் அவ்வாளுக்கே 
அடிமைப்பட்டு 
என்றென்றைக்கும் அதில்
உறைந்திருப்பதாய் 
பெருமை கொண்டிருந்தேன்.... 😌😔

என்ன செய்தேனும் 
அவ்வாளை மீட்டெடுத்தே 
தீர வேண்டும்..
ஒருவேளை, 
எதிரியின் கரங்களில் 
அகப்பட்டிருப்பின், 
இக்காட்டிலேயே எனதுயிரை 
துறந்து விட 
வேண்டியதுதான்😠.... 

பேருக்கென நீரோடையிலிருந்து 
சற்று அள்ளிப் 
பருகிவிட்டு 
குதிரை மீதேறி 
தப்பி வந்த 
பாதையிலேயே அதைச்
செலுத்த முற்பட்டேன்..
பாவம் அதன் 
கண்களில் மரணபயம் 
மீண்டும் மிளிரத் 
தொடங்கியது....

குறிப்பிட்ட தூரத்தைக் 
கடந்ததும் 
ஒரு மிருகத்தின்
வீறிடும் குரல் 
காட்டையே அதிரச் 
செய்தது..
நான் விருட்டென 
குதிரையிலிருந்து குதித்து 
பரபரவென ஓடி 
ஒரு புதர்மறைவில் 
பதுங்கியபடி 
சப்தம் வந்த 
திக்கில் நோட்டம் 
விட்டேன்🧐....

சற்று தூரத்தில் 
ஒரு விறகுவெட்டிச் 
சிறுவனும் அவனது 
கழுதையும் தென்பட்டனர்....

அக்கழுதை விறகுச்
சுமையோடு தரையில் 
விழுந்து கிடந்தது..
அச்சிறுவன் விறுவிறுவென 
கழுதையின் மீது 
கிடந்த 
விறகுப் பொதியை 
அப்புறப் படுத்தினான்..
அதன் கால்களைப்
பரிசோதித்தான்..
பின்னர் தனது
தலை மீது
கைகளை வைத்து
திகைத்துப் போய்
அமர்ந்துவிட்டான்..
அதன் கால்கள் 
உடைந்து விட்டன போலும்..
கழுதை வேறு
வாதைக் கத்து 
கத்தியது..
ஓநாயோ சிறுத்தையோ 
வரத் தான் 
போகிறது😕....

சற்று நேரம் 
யோசித்த அச்சிறுவன் 
பிறகு 
படக்கென எழுந்து 
சென்று 
தனது விறகுப் 
பொதியிலிருந்து என்னத்தையோ 
உருவினான்..
பளபளப்பான எதோ 
ஒன்று..
நிற்க !😶
அது எனது வாள் 🤨!!
ஆமாம் என்னுடைய 
கூர் வாளே தான் 😍😍!!!
சந்தோஷத்தில் முன்னே 
செல்ல எத்தனித்தேன்🙂.... 

அப்போது அச்சிறுவன் 
கண்ணிமைக்கும் 
பொழுதிற்குள் 
அவ்வாளினை உயர்த்தி 
தன் பலங்கொண்ட 
மட்டும் அக்கழுதையின் 
கழுத்தில் இறக்கிவிட்டான்..
அத்துடன் அதன் 
உயிர்வாதையும் ஓய்ந்தது..
நான் விக்கித்துப் 
போய்விட்டேன்😳😳!!!

எத்துணை மாவீரர்களின் 
உயிரைக் குடித்த
கூர்வாள்!!
தங்கப் பிடியிட்டது!!!
2 துலாம் எடை 
கொண்டது!!!
அதைக் கொண்டு 
ஒரு கழுதையை? !? !? !🥺
ம்ஹும், 
வீரென்னும் இறுமாப்பு
நொடிப்பொழுதில் 
பொடிப்பொடியாக 
தகர்ந்து..
தகர்ந்ததே ஆயினும் 
முற்றிலும் ஒழியவில்லை..
தகர்ந்து விட்ட 
இறுமாப்பிற்கும் 
ஒருவித சல்லித்தனம் 
உண்டு😓....

மண்டை முழுவதும் 
எரிச்சலுடன் 
எனது குதிரையிடம் 
சென்றேன்😡..
என்னைக் கண்டதும் 
மெல்லக் கணைத்தது..
அக்கணைப்பு, 
"வாள் எங்கே? "
எனக் கேட்பதாக 
தோன்றியது..
"வாளாவது மயிராவது!!"😤
முணுமுணுத்தவாறே 
அதன் மீதேறியமர்ந்து 
வந்த வழியிலேயே 
திருப்பி 
அதனை தட்டிவிட்டேன்....

------------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-