பாரம் :-

செவிகளை அடைக்கச் 
செய்யும் ஆரவாரத்துடன் 
பெருமழையொன்று 
கொட்டிக் கொண்டிருந்தது.... 

கண்களை நிறைக்கும் 
குளிர்ச்சியை சிலிர்ப்புடன் 
அனுபவித்தபடி 
மழையினூடே தெரியும்
மங்கலான காட்சிகளினுள் 
மனதை செலுத்திக் 
கொண்டிருந்தேன்....

'விர்'ரென மழையின் 
திரையை கிழித்தவாறு 
பறந்து வந்த 
ஒரு காகம் 
என்னருகேயிருந்த கொடிக்கம்பத்தின் 
மீது 'படக்'கென 
அமர்ந்து கொண்டது.... 

அமர்ந்த கணம் தொட்டு 
ஓயாமல் கரைந்து 
மழையைப் பற்றி 
என்னிடம் குறைபட்டுக் 
கொண்டது.
கூட்டை பற்றிய 
கவலையும் அதன் 
தொனியில் தெரிந்தது....

மழையின் வேகம் 
சற்றே குறைந்ததும் 
'விருட்'டென உந்தி 
மீண்டும் 'விர்'ரென 
பறந்து, 
நொடிப் பொழுதில் 
என் பார்வையினின்று 
விலகி மறைந்தது....

மறுநாள், 
மழையில் சரிந்த 
மரங்களை காண்கையில் 
மெல்ல மெல்ல 
அக்காகத்தின் சோகம் 
என் மீதும் 
அப்பிக் கொண்டது..
கூடவே, 
சரிந்து கிடக்கும் 
மரங்களின் 
பெரும் பாரமும் 
அசையவிடாமல் என்னை 
அழுத்தத் தொடங்கிற்று....

--------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-