துரோகி:-

தொடக்கத்தில் அவர்கள் 

காதலித்ததுப் பற்றி 

எதுவும் தெரியாது..

ஒரே ஒரு முறை 

அவளை என்னிடம் 

அறிமுகப்படுத்தியிருந்தான்.... 


மலர்க் காம்பினை 

பிசிராமல் கிள்ளி 

எடுக்கும் லாவகம் 

நிறைந்த பேச்சு 

அவளிடம்.. 

கவிதைகள் என்றால் 

கொள்ளைப் பிரியம் 

என்பது 

கூடுதல் தகவல்....


ஒருநாள், 

அவளைக் காதலிப்பதாய் 

என்னிடம் சொல்லிக் 

குழைந்தான்..

அவளுக்கென

அடிக்கொரு முறை 

கவிதைகளை இரவல் 

வாங்கிச் செல்வான்....


அவனது பெயரிட்டு 

எழுதித் தந்திருந்தாலும், 

உணர்வுகள் என்னுள்ளிருந்தே 

வெளிப்பட்டன.. 

ஏனெனில், 

அவள் எப்போதும் 

என்னுள்ளே பொதிந்திருந்தாள்.... 


அத்தருணங்களில் மட்டும் 

என்னுள்ளிருந்த மொழிச்

செறிவிலிருந்து

வார்த்தைகளை பக்குவமாக 

வெட்டி எடுத்து, 

கவிதைகள் தம்மைத்தாமே 

அழகுறச் செதுக்கிக் 

கொண்டன.... 


பிறிதொரு நாள் 

அவளும் அவனைக் 

காதலிப்பதாய்

அவன் குதூகலித்து 

சொன்னபோது, 

அவள் மீதான 

மிதமிஞ்சிய ஈர்ப்பு 

என்னை அவளிடம் 

வெளிப்படுத்திக் கொள்ளுமாறு 

உள்ளூர தூண்டியபடி 

கனலத் தொடங்கிவிட்டது....


"அவன் எழுதியதாக 

தந்த கவிதைகள் 

யாவும் என்னுடையவையே"

என்று சொல்லிவிடலாம் 

என அவள் வீடு 

வரை சென்றுவிட்டேன்..

அங்கே 

அவளும் அவனும் 

என்னை ஒரு சேர 

வரவேற்றனர்....


அவனது பால்

சிரிப்பின் முன் 

நான் புரிய முனைந்த

துரோகத்தின் 

அழுகல் வீச்சத்தை 

என்னாலேயே 

சகிக்க இயலவில்லை..

பிற்பாடு, 

அவசர அவசரமாக 

மாற்றல் வாங்கிக்கொண்டு 

வெகு தூரம் 

விலகி வந்து விட்டேன்.... 


ஒரு வருடத்திற்குப் 

பின் வந்த 

அவர்களது திருமண 

அழைப்பை 

திறந்து பார்க்கும் 

திராணி கூட 

அற்றிருந்தேன்....


இப்போதெல்லாம், 

அன்றே அவளிடம் 

உண்மையைச் சொல்லியிருக்கலாமோ 

எனும் மனத் துரோகம் 

அவ்வப்போது தோன்றுவதுண்டு..

ஆனால் 

நண்பனின் முகத்தை 

காண வேண்டிய 

சூழல் இக்கட்டுக்கள் 

ஏதும் இல்லையாதலால்

அதனை கணநேரம் 

அனுமதித்து, 

ரசித்து, 

சிலாகித்து, 

பின்னர் அடுத்த 

வேலையை நோக்கி 

நகர்ந்து விடுவேன்.... 


---------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-