பிக்க்ஷை:-

கந்தலாடை போர்த்திய 
பெண்ணுருக் கொண்டிருந்தது 
அந்த இரவு.... 

மினுங்கும் பொத்தல்களின் 
வழியே அவளது தேகம் 
ஒளிக் கற்றையென 
கசிந்து கொண்டிருந்தது.... 

தோஷம் தீர 
வனமெங்கும் அலைந்த 
இறைவன், 
கபாலம் ஒட்டிக்கிடக்கும் 
தனது வலக்கையை 
அன்றைய பிக்க்ஷைக்காக 
அவளிடம் ஏந்தினார்.... 

இறைவனை தொடர்ந்து 
வந்த 
சாபத்தின் சாயை, 
அவரது தற்போதைய 
நிலை கண்டு 
எக்காளமிட்டுச் சிரித்துத் 
தீர்த்தது....

மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் 
இறைவனின் வதனமெங்கும் 
திரிதிரியாய் பிண்ணிக் கிடக்கும் 
பாம்புகளைப் போன்று
விதியின் ரேகைகள் 
படர்ந்து கொண்டே 
சென்றன....

இரவென்னும் அப்பெண் 
தன்னையே அர்ப்பணிக்க 
முனைந்தாள்..
தனது நட்சத்திரப் 
பூக்களை உகுத்தாள்....

உதிரும் ஒளிச் சில்லுகள் 
கபாலத்தை நிரப்பத் 
தொடங்கியதும், 
அகோரப் பசியால் 
ஆட்பட்டிருக்கும் இறைவன்
அவற்றை மொத்தமாக 
கவிழ்த்து 
அவசர கதியில் 
விழுங்கத் தொடங்கினார்.... 

தொண்டைக் குழிக்குள் 
எக்குத் தப்பாய் 
இரு நட்சத்திரங்கள் 
சிக்கிக் கொள்ள, 
இது தான் சமயமென 
வறட்சியின் உருப்பெற்று 
அச்சாயை 
அவரது நாவில் 
படர்ந்து கொண்டது....

மூச்சடைக்கும் உறுத்தல் 
ஒருபுறம் 
நாவறளும் தாகம் 
மறுபுறமென 
சாபத்தின் உச்சத்தில் 
இறைவன் அல்லாடிக் 
கொண்டிருந்த நிலை கண்டு 
மனமிரங்கி 
பெருமழையென பொழிந்தாள் 
ஆகாய கங்கை.... 

சில்லென்ற நீர்த்துளிகள் 
அவரது நாவறட்சியை 
தணித்தப்  பின்,
சிக்கிக் கொண்டிருக்கும் 
நட்சத்திரங்களையும் அவை 
ஒன்றன் பின் ஒன்றாய் 
உள்ளூர உருளச் 
செய்தன....

யாவற்றையும் பார்த்துக் 
கொண்டிருந்த இரவோ 
இறைவனின் சாபம் 
தீர வேண்டி
ஒரு சூறாவளியின் 
பெரும் சப்தத்துடன் 
அரற்றி பிரார்த்தித்துக் 
கொண்டது....

இரவின் பிரார்த்தனையை 
கேட்டும் கேட்காதது போல் 
மயானம் நோக்கிய 
தனது பயணத்தை 
தொடர்ந்தார் இறைவன்..
அவரிடம் இன்றைய 
பிக்க்ஷை கிடைத்து விட்டதின் 
திருப்தி மட்டுமே 
எஞ்சியிருந்தது..
உடன், அவரைப்
பின்தொடரும் 
சாபத்தின் சாயையும்.... 

--------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-