களவாடி:-
முன்பொருமுறை
பாதசாரியாக நெடும்பயணம்
மேற்கொண்டிருந்தேன்..
அப்போது தான்
அந்த விசித்திரமான மனிதனை
சந்திக்க நேர்ந்தது ....
“நான் தாரையைச்
சேர்ந்த ஒரு யாத்ரீகன்”
சேர்ந்த ஒரு யாத்ரீகன்”
என்றென்னை அறிமுகப்படுத்திக்
கொண்டதும்,
தானொரு
"பிம்பங்களின் களவாடி"
என பெருமிதத்துடன்
அவன் கூறிக்கொண்டான்....
“கண்ணாடியை களவாடலாம்,
பிம்பங்களை களவாடுவதாவது?!”
சிரிப்புடன் வியந்தேன்....
“ஏன் இல்லை”
என்றான் அலட்சியமாக,
தனது பீடியை
பற்ற வைத்தபடி....
“அவை சுயமோ திடமோ
அற்றவை.
அவற்றைப் பற்றி
பிடிக்க முடியாதே? ”
குழப்பத்துடன் வினவினேன்....
“ஆனால் பறிகொடுக்க
முடியுமல்லவா”
என்றான் விநயத்துடன்....
எனக்கு எதுவும்
விளங்கவில்லை.
மலங்க மலங்க
விழித்தேன்....
என் தவிப்பை
புரிந்துகொண்டான் போலும்..
எனது தோளை
ஆறுதலாக தட்டி,
என்னை அருகிலிருந்த
பாறையொன்றின் மீது
அமர்த்தினான்..
பின்னர் என் முகத்திற்கு
மிக நெருங்கி வந்து
“இன்னொரு முறை
சொல்லும். நீ யார்? “
என்றான்....
“நான்” என்று சொல்ல
வாயெடுக்கையில் தான்
கவனித்தேன்,
அவனது கருவிழியின்
பிரதிபலிப்பில்
எனது பிம்பம் புலப்படவில்லை.
“என்ன இது!!?? !!”
என நான் விக்கித்திருக்க..
அவன் அமைதியாக
“நான் தாரையைச்
சேர்ந்த ஒரு யாத்ரீகன்”
என்று நவிழ்ந்து,
மென்புன்னகையுடன்
என்னுள்ளிருந்து
விலகிச் சென்றான்.
காட்சிகளின் மாயைகள்
தன்னுணர்தலின் வெப்பத்தால்
பனிப்படலம் போல்
கரைந்து கொண்டிருக்க..
காலக் கடிகாரம்
இயங்கும் கடமுட
சப்தங்களின் அதிர்வுகளை
எனது பாதங்கள்
உணரத் தொடங்கின....
அவ்வேளையில்,
அதன் குறிமுட்களின்
மையத்தில் பதிக்கப்பட்ட
அச்சாணியாய்
நான் சமைந்திருந்தேன்.
----------------------Jinovy
Comments
Post a Comment