உருமாற்றம் :-

நட்ட கல் ஒன்றின்
எதிரில் அமர்ந்து 
மந்திரங்களை உச்சரித்துக்
கொண்டிருந்தேன்....

எங்கிருந்தோ வந்த
பட்டாம்பூச்சியொன்று 
கண நேரம் 
அதன் மீதமர்ந்து
தன்னை இளைப்பாற்றிக் கொண்டு 
மீண்டும் காற்றில் 
தவழ்ந்து சென்றது....

இருட்டிலிருந்து தம்மை 
வெளிப்படுத்திக் கொண்ட
நாகமொன்றும் கீரியும்
சண்டையிட்ட படியே 
நட்ட கல்லைச்
சுற்றி வட்டமடித்து
மீண்டும் புதருக்குள்
மறைந்து கொண்டன....

சிதறும் கவனத்தை
இறுக்கிப் பிடித்திழுத்து
எனது பார்வையை
நட்ட கல்லின் மத்தியில்
புதைத்தபடி
மந்திரங்களின் இறுதிக்கட்டத்தை
நெருங்கி கொண்டிருந்தேன்....

திடுமென நட்ட கல்
ஆயிரம் தலைகளையும் 
ஈராயிரம் கை கால்களையும்
கொண்டதாய் விரிந்தெழுந்து
நடனமாடத் தொடங்கியது....

சுற்றியுள்ள யாவும்
அதே துடிப்புடன்
மேல் கீழாவோ
பக்கவாட்டிலோ
அதிர்வதாய் தோன்றியது....

என்னை புறந்தள்ளி
தன் முன்னே 
பரப்பிக் கிடந்த 
பிரபஞ்சத்தின் 
ஒவ்வொரு அணுக்களின் 
மீதும்
பாதம் பதித்து ஆடிய 
அந்த நட்ட கல்,
பின்னர் சூட்சமமாய் 
உருமாறி என்னுள் 
புகுந்து கொண்டதும் 
நான் ஒரு 
ஆல விதையாய்
மாற்றப்பட்டேன்....

தற்போது, 
பிரபஞ்சத்தை விருட்சமாக்கும்
முயற்சியில் 
பூமியுள் புதையுண்டு 
மழைக்கென பொறுமையுடன்
காத்திருக்கிறேன்..
ஆனாலும்
விதையினுள்ளும் அதிர்ந்து
கொண்டேயிருக்கிறேன்....

------------ Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-