இயற்கையும் இசையும் இளம்பெண்களும் :-

மஞ்சள் பாரித்த 
ஓர் அந்தி வேளையில் 
தலைவாரியபடி கதைத்துக்கொண்டிருக்கும்
இளம்பெண்களை பார்த்தபடி
அமர்ந்திருந்தேன்....

கபடமில்லாத காமமும்
மூர்க்கமில்லாத காதலும்
காயப்படுத்தாத கேலிகளும்
கட்டுக்குள் இல்லாத சிரிப்பொலிகளும்
அவர்களது கதையாடல்களினூடே 
தளும்பியும் வழிந்தும்
வெளிப்பட்டன....

முன்பின் பார்த்திராத 
அந்நியனொருவன்
தங்களை அவதானிக்கும்
எச்சரிக்கை உணர்வினூடே,
அவர்களையும் அறியாது 
அவ்வப்போது ஓரிரு 
வசீகர பார்வைகளை 
ஒவ்வொருத்தியும் என் மீது
எய்து திரும்பினாள்....

போதையற்று தனித்திருக்கும்
அரிதான இம்மாலையில்
அவர்களுடனான இந்த
முரணானதொரு பிணைப்பு, 
மகரந்தத்தை முகர்ந்து
முயங்கும் வண்டினை போல் 
என்னையும் மயக்கத்தில்
கிடத்தியது....

இருள் பற்றத்தொடங்கியதும் 
ஒவ்வொருத்தியும் விறுவிறுவென
குழுவிலிருந்து விடைபெற்று 
தத்தமது இல்லம் நோக்கி
விரையத் தொடங்கினர்..
அவர்களது அவசரத்திலும்
விடைபெற்றலிலும் 
நான் ஒரு 
கருதுபொருளாகக் கூட 
இருக்கவில்லை போலும்....

அடர்த்தியான இயற்கையின்
மத்தியில் அமர்ந்து 
அமைதியை ரசிக்க வந்தவன்,
அதன் சாயல் பூத்த
இந்த குமரிகளின் ஈர்ப்பினுள் 
இதுவரை அமிழ்ந்து கிடந்தேன்..
இப்போது அவர்கள் 
கலைய ஆரம்பித்ததும்,
இந்த இயற்கை 
வெறுமனே என 
தோன்றத் தொடங்கியது....

மெல்ல கைப்பையிலிருந்து
புல்லாங்குழலை எடுத்து
எனது உணர்வுகளை
துளைகளின் வழியே 
இயற்கைக்கு தெரியப்படுத்தினேன்....

இன்னும் 
எனது பார்வையின்
எல்லையை கடந்திராத
அந்த இளம்பெண்கள்,
மீண்டும் ஏதோ 
காரணம் கொண்டு
தொலைவில் ஒருங்கி 
தங்களுக்குள் பேசுவது போல்
ஓரிரு கணம் நின்று,
மீண்டும் அதே 
வசீகர பார்வைகளை
எனக்கு காட்டி சிரித்து
பின்னர்,
கலைந்து சென்றனர்....

இன்னும் நான் 
இயற்கையின் மத்தியில்
இசைப்பதை நிறுத்தவில்லை..
இதுவரையிலான எனது
நாடோடி வாழ்க்கையில்
பேருவுகையின் உச்சமான
இந்த கணங்கள்
இயற்கையும்,
இசையும்,
இளம்பெண்களுமாய்
நிரம்பியிருக்கின்றது....

------------------ Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-