தேவதை:-

முன்னொரு பிறவியில் 
இரவின் காயங்களை 
மறைத்த  நிலவொளியில் 
எனது நரம்புகளை மீட்டி 
என்னை உயிர்ப்பித்தாய்....

அடுத்துவந்த ஒன்றில்,
உனது நிழல் 
தரையில் படர 
நீ சென்ற போது 
உனது தெய்வீகம்
விட்டில் பூச்சியாய் 
இறப்பின் தருவாயில் 
இருந்த 
என்னை தேவதையாய் 
உருமாற்றி நகர்ந்தது....

துயரங்களின் அடர்ந்த 
மூலைகளில்  
நீ மறைந்து 
கொண்ட நாட்களிலெல்லாம் ,
நான்  கையில் 
மந்திரக்கோலுடன் 
உன்னைத் தேடி 
பறந்து கொண்டிருந்தேன்....

இறப்பற்ற இந்த 
ஆகாயம் 
என் மீது 
வெம்மையையும் குளிரையும் 
மாற்றி மாற்றி 
உமிழ்ந்தது ..
எனது சிறகுகள் 
காய்ந்து சருகாகின 
என் மந்திரக்கோல் 
வலு இழந்து 
சுருங்க ஆரம்பித்திருந்தது ....

அந்த தருணம் 
சிதைந்த உருவுடன் 
நீ,
ஒரு மலரின் 
மேல் 
அயர்ந்து படுத்திருந்தாய்..
உன்னைக் கண்டதும்
எனது ஆத்மா 
பிரபஞ்சத்தின் மொத்த 
பரவசத்தையும் 
எனக்குள் விகசிக்க 
செய்தது ....

உடனே, 
என்னை ஒரு 
புழுவாய்  மாற்றும்படி 
உத்தரவிட்டு,
மந்திரக் கோலை 
நழுவவிட்டேன்..
பின்னர்,
மலரின் மேல் 
மெல்ல ஊர்ந்து 
உன்னை வந்தடைந்தேன் ....

என்னைக் கண்டதும் 
அயர்ச்சியுடன் புன்னகைத்தாய் 
ஆரத் தழுவினாய் 
"என் தேவதை" எனக் 
கொஞ்சினாய்..
நான் சிணுங்கிக் 
கொண்டே,
"எனக்கு இறவாமை 
விமோசனம் கொடு "
என்றேன்..
இதைக் கேட்டதும்,
முதலில் பொய்க் 
கோபம் காட்டிப் 
பின்னர் சிரித்து
இறுதியாக,
என்னை முத்தமிட்டாய்....

---------------------------- Jinovy

Comments

Popular posts from this blog

விழிப்பு:-

அசுவாரசியமான மனிதர் :-

இறுதிக் கடிதம்:-