வைரவன் குகை:-
வெகு நேரமாய்
மனம் ஏனோ
அக்கினி வெயிலில்
காயும்
பட்டமரம் போல்
புழுக்கப்பட்டு கிடந்தது....
“சரி சற்றேனும்
கண்மூடி அமர்ந்திருப்பம்”
என,
வைரவன் குகையினுள்
குளுகுளுத்து கிடந்த
வாகான பாறையொன்றை
தூசு தட்டி
ஏறி அமர்ந்தேன்....
கண் மீது
இமை கவிழும் முன்னே
சன்னமாய் பிளந்திருந்த
வெடிப்பொன்றை அப்பாறைமேல்
காணுகையில்,
மனம் ஒரு குத்தூசியாய்
மாறி சத்தமின்றி
அதனுள்ளிறங்கி
சப்பணமிட்டு அமர்ந்து
கொண்டது....
வெற்றுடம்போ பாறைமேல்
ஒன்றன்மீதொன்றாக அடுக்கப்பட்ட
கூழாங்கல் உருப்படிகளென
நெட்டுக்குத்தாய் ஜில்லிட்டு
கிடக்கின்றது....
மலையுச்சியில் குளியலுக்கு
காத்துக்கிடக்கும்
தண்டாயுதபாணியின் மேல்,
அடிவார தடாகத்திலிருந்து
மொண்டு வந்த
தண்ணீர் குடத்தை
வரிந்து சுருட்டிய
கச்சம் சகிதமாய் ஐயர்வாள்
கவிழ்த்துப் பிடிக்கையில்,
கொட்டிய நீர் வீழ்ச்சியென
விழுந்து
தடாகத்தின் அடிநோக்கி
குகையை அமிழ்த்தி
மூழ்கடித்தது....
நீர் புகுந்த பிளவை
விடுத்த மனம்
மிதந்தபடி
உடல் வந்து சேர்ந்து
சங்கமிக்க..
மறுகரையில்
இந்திரன் ஆளும் சொர்க்கபுரி
தலையாட்டி பொம்மை போலே
கினுங் கினுங் சத்தத்துடன்
இடவலமாக ஆடிக்கொண்டே
தனது வாயிற்கதவுகளை
அகலத் திறந்துவைத்தபடி
எனை நோக்கி
வந்து கொண்டிருக்கின்றது....
--------------------------Jinovy
Comments
Post a Comment