மகள் :-

அந்த சின்னஞ்சிறிய 
ஊஞ்சல் பலகையில்
அவளை அமர்த்தி
சற்றே விசைகொடுத்து
தள்ளினேன்..
அவளது குதூகலத்தின்
அலைவரிசைகள் எங்கிலும்
எனது பிம்பம்
சிறிதும் பெரிதுமாய்
முளைத்துக் கிடந்தது....

மின்மினி பூச்சிகள்
தங்கள் வயிற்றில்
சுமந்து வந்த 
ஒளிச்சட்டியை கண்டதும்
அவளது கண்கள் 
உப்பி பெருத்தன..
நான் ஆளுயர 
மின்மினியாய் உருமாறி 
அவளை அணைத்துக்
கொள்கையில்,
அந்த குளிர்ச்சியான
வெளிச்ச மழையில்
அவள் நனைந்து
மகிழ்ந்தாள்....

பலூன் கடைக்குள்
நுழைந்ததும்
அவள் பலூன்களை
போலவே மிதந்து
சென்றாள்..
பலூன்களை சகசிறுமிகளாகவோ
அல்லது
தன்னை ஒரு பலூனாகவோ
நினைத்துக் கொண்டு
அவைகளிடம் கதையளந்தாள்,
இடையிடையே 
தனது காலால்
இடறி
என்னையும் மிதக்கவிட்டாள்....

நாங்கள் வீட்டிற்கு
வந்து சேர்ந்த 
நேரத்தில்,
அவள் என் 
தோள் மீதே 
தூங்கி போயிருந்தாள்..
கனவுகள் கண்டுகொண்டிருப்பாள் 
என யூகித்தேன்..
அவளது வற்றாத
கனவுப் பூக்களுக்கு
நீர் வார்க்க 
நான் உள்ளிறங்கியபோது,
அங்கே அவள் 
எனது சந்தோசத்தின் 
வலைப்பின்னல்களை நேர்த்தியாக 
பின்னிக் கொண்டிருந்தாள்....

---------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-