பிழைத்திருத்தல் :-
காகிதத்தை மடித்து
கப்பல் செய்ய
முயன்றவாறே
வெகுதூரத்தை நடந்தே
கடந்திருந்தேன்....
கப்பலின் முனை
மழுங்கலாய் வரவும்
எரிச்சலுடன் அதை
தார்ச்சாலையில் எறிந்துவிட்டு
அந்த அத்துவானப்
பாதையை வெறிக்கத்
துவங்கினேன்....
இரவு முழுவதும்
வயிறு முட்டக்
குடித்திருந்த ஒயினை
பற்றி யோசித்ததும்
வாயில் எச்சில்
ஊறத் தொடங்கியது....
"பேண்ட் பாக்கெட்டில்
சிகரெட் ஒன்றேனும்
மிச்சமிருந்தால்" என்ற
நப்பாசை
ஒரு கணம்
எழுந்து, பின்
மங்கி இருண்டது....
"கழுதையும் கரடியும்"
என சபித்தவாறே
நேற்றைய சண்டையில்
குருதி பீறிட்டத்தின்
வலியை,
தோள்பட்டையில் கட்டிட்ட
காயத்தின் மீது
பொருத்தி பார்த்துக்கொண்டேன்....
படுக்கையில், என் இடத்தில்
படுத்து அவனும்
அனுமதித்து அவளும்..
விநோதம்,
என்னைக் கண்டதும்
தங்கள் நிர்வாணத்தை
மறைக்க
அவர்கள் திணறியது....
அவர்களுக்கு உறுத்தும்
என, கழட்டி
கட்டில் விளிம்பில்
தொங்க விடப்பட்ட
முகப்பிட்ட தாலிக்கொடி
என்னை உறுத்தியது....
"டமார்"
என் கவனம்
உடைப்பட்டது..
பின்னே சற்று
தூரத்தில்,
ஒரு லாரியும் காரும்
மோதியிருப்பது புலப்பட்டது..
லாரி ஓட்டி வந்தவன்
கீழிறங்கி ஓடத்
துவங்கிவிட்டான்..
அந்த கார்....
கரடியும் கழுதையும்
ரத்தம் வழிய..
அந்த இரு ஜோடி
கண்கள்
என்னிடம் ஏதோ
கூற விழைந்தன..
இருப்பினும் என்னைக்
கவர்ந்தது அவனது
பாக்கெட்டின் வெளியே
துருத்திக் கொண்டிருந்த
சிகரெட் பெட்டி....
"என்ன செய்யலாம்?"
முடிவிற்கு வர
இயலாத
நீண்ட யோசனையில்
சிகரெட் ஒன்றை
புகைத்தவாறு கீழே
பார்க்கையில்,
கார் டயரிடமிருந்து
மயிரிழையில் தப்பித்துக்
கிடந்தது எனது
காகித கப்பல்....
-----------------Jinovy
Comments
Post a Comment