வித்தைக்காரன்:-

வழிப்போக்கன் ஒருவன் 
துணையுடன் மலையுச்சியை 
கடந்து கொண்டிருந்தேன்....

அவன் கதைப்பாடல்களை 
பாடிக்கொண்டே 
விண்மீன்களை பிடுங்குவதாக
பாவனை செய்தபடி
முன்னே சென்றான்....

நான் களைத்துவிட்டதாக
கூறி அமர்ந்ததும்,
தன் உள்ளங்கையில்
மிதந்து கொண்டிருந்த
நட்சத்திரங்களை என்னிடம்
காட்டிச் சிரித்தான்....

வாய் கொள்ளா
ஆச்சரியத்துடன் நான்
பார்த்துக் கொண்டிருக்கையில்,
அவன் பிரபஞ்ச
ரகசியங்களின் அறையொன்றை
வானவெளியில் திறந்து
அதனுள்ளிருந்த விண்மீன்
குவியலை நோக்கிக்
கையிலிருப்பவற்றை வீசியெறிந்து
கதவை அடைத்தான்....

பின்னர் பாடலை 
விட்ட இடத்திலிருந்து
தொடர்ந்தபடி
என்னை பின்தொடரச்
சொல்லி சைகைகாட்டி
செல்லலானான்....

நான் 
அந்த அறைக்குள்ளோ
அல்லது
அவன் உள்ளங்கையுள்ளோ
அகப்பட்டிருப்பதாக 
நினைத்துக் கொண்டேன்,
அவனது பரிகாச
சிரிப்பொலி எனக்குள்ளிருந்து
எதிரொலிக்கத் துவங்கியது....

------------------ Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-