நிழலின் கதைகள்:-
என் முன்னே
மடிப்புற்றுக் கிடக்கும்
நிழல் சொல்லும் கதைகள்
ஆயிரம்....
முதன்முறை மதுக்குடித்து
தலை கிறுகிறுத்த இரவில்,
பால்கனியின் மீதேறி நின்று
எக்காளமிட்ட போது
சுவருக்கும் தரைக்குமாய்
மடிப்புற்றும்
நீண்டும் கிடந்தது
எனது நிழல்....
கொளத்தூர் செல்வியுடன்
களிப்பதெற்கென,
யாவரும் உறங்கிய
நேரத்தில்,
அம்மாவின் பீரோவை
திருட்டுச் சாவி போட்டு
கைவிடும் இடைவெளிக்கு
அளவாய் திறந்து
கமுக்கமாய் பணத்தை
துழாவுகையில்,
சுவருக்கும் பீரோவிற்குமாய்
மடிப்புற்று
நெளிந்து கொண்டிருந்தது
அந்த விகார நிழல்..
தலைப் பகுதி மட்டும்
பழுப்பேறிய ஜன்னல்கதவில்
உள்வாங்கி நீண்டிருந்தது....
செபாஸ்டியனுடன் சேர்ந்து
கார்களை களவாடிய போதும்,
பைசல் மரணத்திற்கென
ஆயில் முருகனின் கோஷ்டியை
துண்டாடிய போதும்,
நைஜீரிய மாணவர்களின்
போதை கிடங்கை
ஆக்கிரமித்த போதும்,
எங்கெங்கோ மடிப்புற்றுக்கிடந்த
எனது நிழல் என்னிடம்
ஏதோ சொல்லி முனகியது..
நான் தீர்க்கமாக பார்க்கையில்
பயத்துடன் நிசப்தித்து கிடந்தது....
சிறைக்கு வெளியே
நான் கடைசி முறையாக
அதை கண்டது..
சாலையெங்கும் சிதறிக்கிடந்த
சிறுபிள்ளைகளின் உடல்கள்
மீதேறியும் இறங்கியும்,
மறுகோடி வரை தடையற்று
நீண்டிருந்தது எனது
ராட்சத நிழல்..
முன்போல் அது இப்போது
முனகவில்லை..
வெடிச்சிரிப்பு சிரித்து
கெக்கலித்தது....
ஆயிற்று..
தூக்குமேடைக்கு வந்தாயிற்று..
இப்போதும் என்முன்னே
மேடைக்கும் தரைக்குமாய்
மடிப்புற்றுக் கிடக்கிறது
எனது நிழல்..
“இன்னும் என்ன?“
ஒருமுறை கேட்டுப்பார்த்துக்
கொண்டேன்..
“உனது வினையிலுள்ள
குறைபாட்டையே நான் மடிப்பின்
வழியே தெரியப்படுத்தினேன்”
அமைதியாக அது கூறியது....
ஆம். இதுநாள் வரையிலும்
வெற்று கூட்டையே
சுமந்து வந்துள்ளேன்..
ஆனால்
என்னுடைய ஆன்மாவோ
அந்த மடிப்புற்ற நிழலெங்கிலும்
வியாபித்திருப்பதாய் எனக்குப்பட்டது..
அதே நேரத்தில்,
என் முகத்திற்கும்
திரையிடப்பட்டது....
-----------------------Jinovy
Comments
Post a Comment