புனைவு விதி:-

ஒரு சொல் ஒரு வாக்கியம்
பிம்பங்களும் நபர்களும்
இவையாவுமோ அல்லது 
இவற்றோடு இன்னபிறவுமோ
புனைவுகளாய் சங்கமித்த
நொடிகளில் பிறக்கிறது
ஒரு கதை....

நெஞ்சுக்கூட்டின் மத்தியில்
நெளிந்து உருப்பெருகும்
தயக்கத்தின் கோரப்பசிக்கு
சிக்க மறுத்து
பேனாவின் முனைவழியே
சரிந்து விழுகின்றது....

கதைமாந்தர் சொல்லும் 
கதைகளாகவும் 
கதை வழியே 
பயணிக்கும் கணங்களில்
காரணங்களாகவும் மர்மங்களாகவும்
கதாசிரியன் ஒரு மாயஉலகின் 
எல்லாமுமாக கசிந்துறைகிறான்....

சலனமற்றுப் பார்க்கும்
கருவிழிகள் வழியே
மூளையின் வலப்பக்கத்தை
அடைந்து கற்பனையை
கீழே சொட்டவிட்டு
மனப்பதிவுகளின் கலவையுடன் 
இடப்பகுதியை அடையும்
அதியதார்த்த சாத்தியக்கூறுகளாய்
தன்னை சிதைத்துக் 
கொள்கிறான்....

பிரபஞ்ச பெருவெடிப்பின்
முதல் தோற்றத்தையும்,
கருந்துளைக்குள் யாவும்
புகுந்து கொள்ளும்
இறுதி அழிவையும்
தன்னுள் நிகழ்த்திப்
பார்க்கும் லாவகத்தை
உண்ணும்போதோ உறக்கத்திலோ
அனிச்சையாய் செய்து 
கடக்கிறான்....

இப்போது கூட, 
எங்கோ எழுதப்படுகின்ற 
ஒரு கதையில்
நீங்களும் நானும்
கதாபாத்திரங்களாய்
வாழ்ந்து கொண்டிருக்க,
நம் கதைகளை
தனதாக எண்ணிப்பார்த்து 
ஒரு கணம் 
சிரித்தும் பின்னர் அழுதும்
வெற்றுத் தாள்களில்
இடைவிடாது நிரப்பிக் 
கொண்டே இருக்கிறான்
அந்த கதாசிரியன்....

-------------------Jinovy

Comments

Popular posts from this blog

விழிப்பு:-

அசுவாரசியமான மனிதர் :-

இறுதிக் கடிதம்:-