கடவுளின் கதை:-

சாத்தான் எனப்படுவோர் 
பயணித்து வரும் 
பாதையில்
மௌனமாய் அமர்ந்திருந்தார் 
கடவுள்...

கடவுளைக் கண்டதும்
சாத்தான்கள் 
ஒரு கணம் நின்றனர்..
அந்த விகார
உருவை பரிகசித்தனர்..
அவனது கைத்தடியை
முறித்து எறிந்துவிட்டு,
தங்கள் வழி தொடர்ந்தனர்...

சற்று நேரம் 
பொறுத்து
தேவதைகள் எனப்படுவோர்
வந்தனர்..
கடவுளின் காயங்களுக்கு
மருந்திட்டனர்,
அவனது விகாரத்தை 
போக்கி தம்மோடு 
அழைத்து சென்றனர்...

ஊருக்குள் சென்றதும்
கடவுளின் எழிலைக்காட்டி
சிறிது பணம் 
சம்பாதித்தனர்..
இரவானதும்
கடவுளை
உறங்க வைத்துவிட்டு,
தங்கள் 
வழி தொடர்ந்தனர்...

விடிந்து எழுந்ததும்
கடவுளின் ஆசி பெற
சத்திரத்தின் வழிநெடுகிலும்
மனிதக் கூட்டம்
வரிசைக் கட்டியது..
காக்க வைத்தமைக்காக 
வசைமாரி பொழிந்தது ...

கடவுள் தான் கடவுள்
என்பதை மறந்துவிட,
முன்னர் பலமுறை
முடிவு செய்ததைப்
போல,
இப்போதும் முடிவுசெய்தார்..
தன் அழகை
சிதைத்துக் கொண்டார்,
மனிதர்களின் அறியாமையை
சபித்தார்...

மீண்டும் ,
தான்
முன்பு அமர்ந்திருந்த
இடத்திற்கு திரும்பிச்சென்றார்...

மீண்டும்,
ஏற்கனவே பலமுறை
தான் மறந்திருந்த தன்னை,
நினைவு கூர
முயற்சிக்கும் முயற்சியை
மேற்கொண்டார்...

இடையிடையே,
தன்னருகே முறிந்து
கிடந்த கைத்தடியொன்றை
எடுத்து 
பொருத்திப் பார்க்கவும்
முயன்று கொண்டிருந்தார்....

------------------ Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-