இறுதியாக:-
நீ நம்புவது கடினம்,
இப்போது
நிழலற்ற ஒரு எறும்பு
எனது இருபது வருட
தனிமை மீதேறி
ஊர்ந்து கொண்டிருக்கிறது....
அசைவிற்கொருமுறை
ஈனஸ்வரத்தில்
முனகிக் கொண்டிருக்கிறது
என்னை சுமந்து கொண்டிருக்கும்
இந்த கிழட்டு நாற்காலி ....
பார்வை மழுங்கிய
மூக்குக் கண்ணாடி வழியே
நான் பார்க்க முயற்சிப்பதெல்லாம்
நரைத்துப் போன
எனது மீசை மயிரில்
என்றோ பதிந்த
உன் கைரேகையை
மாத்திரம் தான்....
நீ இறந்த அன்றே
என் காமத்தை
உனது புடவையொன்றில்
சுற்றி வைத்துவிட்டேன்
அது பசியில்
இறந்தாலும் பரவாயில்லை....
ஒவ்வொரு கணத்திலும்
உனது நினைவுகளால்
இந்த வீடு நிரம்பிக்
கொண்டிருந்தது..
இனிமேல் அவ்வாறு இல்லை
ஏனெனில்
நான் மரித்து இப்போது
இருபது நிமிடங்களாவது
ஆகியிருக்கக் கூடும்....
--------------------Jinovy
Comments
Post a Comment