பிறவிச் சாபம்:-

அன்று :

நட்சத்திர குவியல்களுக்கு 
மத்தியில் கிடத்தப்பட்டிருக்கிறாள் 
அவள்.. 
வைரமென ஜ்வலிக்கும் 
விழிகளும் 
மோகம் சிந்தும் 
உதடுகளுமாய்.. 
பலமடிப்புகள் கொண்ட 
விசித்திர ஆபரணமொன்றினால்
அவளது கைகளும் 
கால்களும் பிணைக்கப்பட்டுள்ளன..
விம்மி எழும் 
மார்பும், 
பெருமூச்சும் ஓய்ந்ததும் 
என்னை ஒருகணம் 
உற்று நோக்கிவிட்டு 
மீண்டும் அயர்ந்து 
கொள்கிறாள்.... 

இன்று:

நினைவுகளின் மடிப்புகளை 
கிழித்தவாறே 
காதினுள் பாய்கிறது 
நகரத்தின் பேரிரைச்சல்..
நெரிசல்களுக்கு நடுவே 
புடைத்து வீங்கிக்கிடக்கும் 
கைப்பையை 
இரு கைகளிலும் 
மாற்றி மாற்றி 
தாங்க முயலுகையில், 
சமீபத்தில் சவரம் செய்து 
படிகாரமிட்ட அக்குள்களில் 
ஏற்படும் காந்தாலும் 
எரிச்சலும் 
யதார்த்த வாழ்வை 
மேலும் ரணப்படுத்துகின்றன..
புழுக்கத்தின் கசகசப்பில் 
மீசை மயிரில் 
ஒரு நொடி தங்கி 
வழியும் வியர்வையை 
அனிச்சையாக சுவைத்தபடி 
சாய்ந்து நிற்பதற்கு 
வாகான இருக்கையை 
நோக்கி நகர்கிறேன்.... 

அன்று:

அசைவற்று கிடக்கிறாளே 
தவிர 
அவள் என்னவோ 
என்னை அழைக்கவில்லை 
தான்..
தன்னை விடுவிக்குமாறு 
என்னிடம் கெஞ்சவுமில்லை.. 
சுழலும் மஞ்சத்தில் 
நான் அமர்ந்திருக்கிறேன்..
இடைவாள் இல்லை, 
குறுங்கத்தியொன்றை மட்டும் 
இறுகப் பற்றியிருக்கிறேன்..
பிடியின் இருபுறமும் 
ஏதேனும் பதிக்கப்பெற்றால் 
நன்றாக இருக்குமெனத் 
தோன்றுகிறது..
நிமிர்ந்து அவளை 
பார்க்கிறேன், 
அதோ அவளது 
ஜ்வலிக்கும் கண்கள்....

இன்று:

அந்த குறுகலான 
வீதியின் சாக்கடை 
அடைப்புகள்
ஒவ்வொரு நான்கடி 
இடைவெளியிலும் 
சாலைமீதே  குவித்து
வைக்கப்பட்டுள்ளன..
நைந்ததும் அழுக்கடைந்ததுமான 
ஆடைகளுடன் திண்ணையில் 
அமர்ந்திருக்கும் கிழவர்கள்..
இளைமையை தொலைத்த
காலங்கள் 
அவர்களது கண்களுக்குள் 
ஊடாடி திரிகின்றன..
"முதுமை என்பது 
அனுபவமா நிலையாமையா?"
என்னிடம் நானே 
கேட்டுக்கொள்கிறேன்..
உள்நாக்கிலிருந்து கசிந்து 
வரும் காப்பரின் 
சுவை மற்றும் நெடி..
சுதாரிப்பதற்குள், 
நாசியிலிருந்து விழுகின்றது
இரு சொட்டு 
ரத்தம்..
உருப்படியாய் இருந்த
ஒரே வெள்ளைச்சட்டையையும்
கறைப் படுத்தியாயிற்று...

அன்று:

பெருங்குரலெடுத்து கர்ஜித்தேன்.. 
"ஏன் இந்த மௌனம்? 
தங்கிவிடு என்னோடு.
வதைக்க மாட்டேன்.
நம்மிலிருந்து உலகங்கள் 
உருவாக காத்திருக்கின்றன.
பிரபஞ்சத்தின் அமைதி 
உனது செவிகளை 
நிரப்பவில்லையா? 
என்னை எதிர்ப்பதற்கு 
என்றுமே அது துணியாது"

முதன் முறையாக 
அவள் என்னிடம் 
பேசினாள்..
"தங்கத்தான் போகிறேன் 
உன்னோடு..
ஒரு சாபமாய்..
இப்போது மட்டுமல்ல, 
உனது ஒவ்வொரு
பிறவியிலும் 
உன்னை மரிக்கச் 
செய்யும் சாபமாய்"
குருடியாகினும் இனிமை 
மாறாத அவளது 
குரலில் யாழின் 
அதிர்வுகள் தெறித்தன....

இன்று:

அரசு மருத்துவமனை 
மூலையில் ஒருக்களித்துப் 
படுத்திருக்கிறேன், 
வராண்டாவில் போவோர் 
வருவோரின் 
துக்க விசாரிப்புகளை 
தவிர்ப்பதற்காக..
நான் திடகாத்திரமானவன்..
ஒருவேளை 
ஓயாது வீசிய 
அனல்காற்றின் காரணமாக 
ரத்தம் சொட்டியிருக்கலாம்..
ஒரு யுகமாய் 
அன்றைய இரவு 
கழிந்து கொண்டிருக்கிறது..
திடீரென கணுக்காலில் 
நெருஞ்சி முள்ளைப்
போல 
ஏதோ தைக்க, 
சட்டென போர்வையை 
விசிறி எழுகிறேன்..
அங்கு நான்கடி 
நீளத்தில் நெளிந்து 
கொண்டிருக்கிறது 
ஒரு கருநாகம்..
அதன் கண்கள் 
வைரம் போல் 
ஜொலித்துக் கொண்டிருக்கின்றன....

பளிச்சென பிறவிதோறும் 
தொடர்ந்து வரும் 
சாபத்தின் ஞாபகம் 
நினைவுக்கு வருகின்ற 
அதே வேகத்தில்
விஷமேறிய ரத்தம் 
இதயக் குழாய்களுக்குள் 
பாய்ந்து கொண்டிருக்கின்றது.... 

---------------------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-