இரு நண்டுகள்:-
இந்தப் படுக்கை
கொஞ்சம் எனக்கும்
நிறைய வெறுமைக்குமாய்
இடம் கொடுத்தபடி
தரையை தழுவிக்
கொண்டிருக்கிறது ....
ஜன்னல் விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி
கலனினுள்
நான் வளர்க்கும்
இரு நண்டுகள்
ஒன்றையொன்று நிமிண்டியபடி
அதன் குறுகலான
எல்லைக்குள்
வளைய வருகின்றன....
அவற்றின் இரவு
உணவிற்கான நேரமிது..
சில மீன் குஞ்சுகளையோ
பச்சை மாமிசத்
துண்டுகளையோ எதிர்பார்த்து
தமது மொடமொட
கரங்களை நீட்டி
என்னிடம் சமிக்ஞை
செய்கின்றன....
இடப்பெயர்விற்கு இடமின்றி,
கலனினுள்
அவற்றை அடைத்ததிற்கான
பாவத்தின் சாபமொன்று
எந்நேரமும்
எனது தலையைச்
சுற்றி வட்டமடித்தபடி
இருக்கின்றது..
இருக்கட்டும்....
(ஒரு பெருமூச்சு)
உறக்கம் வராவிடினும்
கண்ணை மூடிக்கொண்டு
கிடக்கும்
பொதுவான அனுஷ்டானத்தினை
நானும் மேற்கொள்கிறேன்..
அவ்விரு நண்டுகளைப்
போலவே
எனது கண்களும்
ஒன்றையொன்று நிமிண்டிக்
கொள்வதாய்
கற்பனை செய்து
பார்க்கிறேன்..
அதன் குறுகுறுப்பு
தாளாமல் தோளை குறுக்கி
கன்னம் அழுந்த
புன்னகைத்தும் கொள்கிறேன்....
-------------------Jinovy
Comments
Post a Comment